என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை விக்டோரியா அரங்கை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
- சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.62 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
- 1888-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்திய கட்டடம்
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்துக்குள் விக்டோரியா அரங்கம் அமைந்துள்ளது. 1888-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் சென்னையின் மிகப்பெரிய முதல் கூட்ட அரங்கமாகவும், நாடகம், திரைப்பட அரங்கமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ள இந்த அரங்கம் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் பழைமையானதால் சேதமடைந்து காணப்பட்டது. அதை பழைமை மாறாமல் புதுப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.62 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. புரனமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விக்டோரியா அரங்கத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து ரூ.74.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி புதிய மன்றக் கூடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.






