என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் குழப்பம்..  போலீசாருடன் மோதல் - சூடமேற்றி கலைந்து சென்ற இந்துத்துவா அமைப்பினர்
    X

    திருப்பரங்குன்றத்தில் குழப்பம்.. போலீசாருடன் மோதல் - சூடமேற்றி கலைந்து சென்ற 'இந்துத்துவா' அமைப்பினர்

    • வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று தீபம் ஏற்றப்பட்டது.
    • தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.

    கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று தீபம் ஏற்றப்பட்டது.

    ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

    இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

    இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.

    144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மலையேற அனுமதி வழங்காததால் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மேல்முறையீடு செய்திருப்பதாலும், 144 தடை உத்தரவாலும் மலை ஏற அனுமதி இல்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×