என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி
    X

    நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி

    • பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதால் குளித்தனர்.
    • சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு புனித நீராடி செல்கின்றனர். அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துகின்றனர்.

    மேகமலை, தூவானம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 18ம் தேதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்தனர்.

    மேலும் நீர்வரத்தையும் அவர்கள் கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுருளி அருவியில் நீர்வரத்து சீரானது. அதனை தொடர்ந்து 13 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதால் குளித்தனர்.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. 1888 கனஅடி நீர் வருகிற நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீா மற்றும் பாசனத்திற்காக 2499 கனஅடி நீர் திறக்கப்படுகிறது அணையில் 5571 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.95 அடியாக உள்ளது. 1830 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1822 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 119 கனஅடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×