என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல் பண்ணைகளில் 2 கோடி முட்டைகள் தேக்கம்
- திடீர் விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- இனி வரும் நாட்களில் முட்டை அதிக அளவில் தேங்க வாய்ப்புள்ளது.
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பகுதிகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கோழிகள் மூலம் தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தின் சத்துணவு திட்டத்திற்கு தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கிறது. ஆனாலும் நிர்ணயித்த விலையை விட முட்டையை குறைந்த விலையில் விற்பதாக புகார் எழுந்ததால் அதனை கண்காணிக்க குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி 490 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக சரிந்து தற்போது 380 காசுகளாக உள்ளது. இதனால் கடந்த 8 நாட்களில் மட்டும் முட்டை விலை 110 காசுகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த திடீர் விலை சரிவுக்கான காரணம் குறித்து முட்டை பண்ணையாளர்கள் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஆண்டு வரை 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் முட்டை உற்பத்தி படிப்படியாக அதிகரித்து 5 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆனால் முட்டை உற்பத்தி அதிகரித்த நிலையில் அதற்கேற்றவாறு முட்டை விற்பனை அதிகரிக்கவில்லை. குறிப்பாக குளிர் காலத்தில் முட்டை விற்பனை அதிகரிக்கும், கோடை காலத்தில் முட்டை விற்பனை குறையும், அதே போல வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் முட்டையின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன் நுகர்வு குறைந்துள்ளது.
மேலும் ஆந்திர மாநிலம் முட்டை உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ளது. தற்போது ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் முட்டை விலை அங்கு வேகமாக சரிந்துள்ளது. இதனால் அங்குள்ள முட்டைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை குறைக்காவிட்டால் இங்கு கொண்டு வந்து ஆந்திர முட்டைகளை அதிக அளவில் விற்பனை செய்வார்கள். இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முட்டை விலை குறைந்த பின்னரும், தேவை குறைந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேங்கி உள்ளது. இனிவரும் நாட்களில் முட்டைகள் அதிக அளவில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தேசிய ஒருங்கிணைப்புக்குழு 380 காசுகளுக்கு முட்டை விலையை நிர்ணயித்துள்ள நிலையில் அதை விட குறைவாக 10, 20 காசுகள் குறைத்து முட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்கிறார்கள். ஆனாலும் இனி வரும் நாட்களில் முட்டை அதிக அளவில் தேங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






