என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    185-வது பிறந்தநாள் விழா: பென்னிகுவிக் சிலைக்கு ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
    X

    185-வது பிறந்தநாள் விழா: பென்னிகுவிக் சிலைக்கு ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை

    • தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது.
    • விவசாயிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக்கின் நினைவாக அவருக்கு தமிழக அரசு தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் நினைவு மணி மண்டபமும், அவருடைய முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மணி மண்டபத்திற்கு தேனி மாவட்ட பகுதி மக்கள் மட்டும் இன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். அவருடைய 185-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங், தங்க தமிழ்செல்வன் எம்.பி. ஆகியோர் தலைமையில் பென்னிகுவிக் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக லோயர்கேம்ப்பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பென்னி குவிக் மணிமண்டபம் வரை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து வண்டியை ஓட்டி வந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கதிரவன், திட்ட இயக்குனர் சந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி ,கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை, சுகாதார அலுவலர் விவேக், தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதே போல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் சையதுகான், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், நமது வெற்றி கழககட்சி நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா, த.வெ.க. கட்சி, மின்வாரிய குடியிருப்புபகுதியினர், கம்பம் பள்ளத்தாக்குபாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம், பார்வர்டு பிளாக் கட்சி, நாம்தமிழர் கட்சி, பா.ஜ.க கட்சியினர், பாரதிய கிஷான் சங்கம், முல்லை சாரல்விவசாயிகள் சங்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர்உட்பட விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்துமாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

    விவசாயிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். கடந்த 2019ம் ஆண்டு முதல் பென்னி குவிக்கின் பிறந்தநாள் விழாவினை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

    இதையொட்டி கூடலூர் நகராட்சி சார்பில் மணிமண்டபம் முன்பு மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் கரகாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், பரதநாட்டியம், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்பட தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்பு துறை, சுற்றுலா துறை மற்றும் கூடலூர் நகராட்சியினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பென்னி-குவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதையொட்டி தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×