என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீ வைப்பு சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி - இறந்த வாலிபர் அசோக்குமார்
பாணாவரம் அருகே தாய், பாட்டியை தீவைத்து எரித்து வாலிபர் தற்கொலை
- அசோக் குமார் மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- தீயில் எரிந்து கொண்டிருந்த 3 பேர் மீதும் மணல் மற்றும் ஈர கோணிப்பையை எடுத்து வந்து தீயை அணைத்து அவர்களை மீட்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள பாணாவரம் அடுத்த மேலேரி பகுதியை சேர்ந்தவர் பழனி. கூலி தொழிலாளி. இவரது மனைவி யசோதா. இவர்களுக்கு அசோக்குமார் (வயது 24) என்ற மகன் இருந்தார்.
இவர் ஐடிஐ முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அசோக் குமார் மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அசோக் குமாரின் தாயார் யசோதா மற்றும் பாட்டி வள்ளியம்மாள் (80) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அசோக் குமார் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த தாய், பாட்டி மீது ஊற்றி தீ வைத்தார்.
பின்னர் அசோக்குமார் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயை வைத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தீயில் எரிந்து கொண்டிருந்த 3 பேர் மீதும் மணல் மற்றும் ஈர கோணிப்பையை எடுத்து வந்து தீயை அணைத்து அவர்களை மீட்டனர். 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் யசோதா, வள்ளியம்மாள் ஆகியோர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






