search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கரை அழைத்து சென்ற பெண் காவலர்கள்
    X

    திருச்சி நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கரை அழைத்து சென்ற பெண் காவலர்கள்

    • வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டுவிடம் சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார்.
    • ஜாமின் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    போலீஸ்அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

    இதற்கிடையே சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட விபத்தில் அவருடைய வலது கையில் காயம் ஏற்பட்டு உள்ளதால் அதற்காக கையில் கட்டு போடப்பட்டு உள்ளதுடன் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு சரவணபாபு, சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் மீது அவதூறாக பேசியதற்கு ஆதாரம் உள்ளதா? தூண்டுதலின் பேரில் பேசினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் விசாரணை முடிந்ததும் நேற்று மாலையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு சரவணபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சவுக்கு சங்கர், தன்னை கோவை மத்திய சிறையில் தனி அறையில் அடைத்து உள்ளனர். என் கையில் காயம் ஏற்பட்டு உள்ளதால் சிரமமாக இருக்கிறது. எனவே என்னை வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டுவிடம் கோரிக்கை விடுத்தார்.

    அதை கேட்ட மாஜிஸ்திரேட்டு, உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், சட்ட உதவி மையம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து சவுக்கு சங்கரை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சரவணபாபு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட்டு சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அந்த மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் பெலிக்ஸின் யூ டியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்படுகிறார்.

    போலீஸ்அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×