என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காண்டிராக்டரை காரில் கடத்தி தாக்கிய கும்பல்- பெண் உள்பட 4 பேர் கைது
- வேல்முருகன், மீனாட்சிக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது.
- இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கடத்தப்பட்ட வேல்முருகனை மீட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி பொத்தையடி சத்திரிய நாடார் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் வேல்முருகன் (வயது30) காண்டிராக்டர்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் நடுத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மனைவி தனலெட்சுமியின் (55) உறவினரான மீனாட்சிக்கு புதுக்கோட்டையில் வீடு கட்டி கொடுத்தார்.
இதில் வேல்முருகன், மீனாட்சிக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி தனலெட்சுமி, வேல்முருகனிடம் பணத்தை கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று வேல்முருகன் பொத்தையடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தனலெட்சுமி, பொன்சேகர் மகன் சுபாகர் (31) மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் சேர்ந்து வேல் முருகனை இரும்பு கம்பியால் தாக்கி காரில் இழுத்து போட்டு கடத்தி சென்றனர்.
இதனை தடுக்க வந்த வேல்முருகனின் சகோதரர் முத்துக்குட்டிக்கு (35) கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கடத்தப்பட்ட வேல்முருகனை மீட்டனர். அவரை கடத்தி சென்ற தனலெட்சுமி, சுபாகர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.






