search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 38 கன அடியாக குறைப்பு
    X

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 38 கன அடியாக குறைப்பு

    • 2 அணைகளில் இருந்தும் 7 ஆயிரத்து 38 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
    • மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 21.04 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    நேற்று முன்தினம் கர்நாடக அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 985 கனஅடி தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று கபினி அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2 அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 7 ஆயிரத்து 38 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 38 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 276 கன அடியாகவும், நீர்மட்டம் 102.74 அடியாகவும் உள்ளது.

    அதே போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 411 கன அடியாகவும், நீர்மட்டம் 75.74 அடியாகவும் உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 7 ஆயிரத்து 38 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் காவிரி வழியாக இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு 11 ஆயிரத்து 22 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 978 கன அடியாக சரிந்தது.

    இன்று காலையில் நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 583 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலையில் 55.48 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.91 அடியாக சரிந்தது.

    மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 21.04 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடியாகும்.

    அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி.வரை குடிநீர் மற்றும் மீன் வளர்ச்சிக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் பார்த்தால் தற்போது தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.

    நீர் திறப்பு இதே நிலை நீடித்தால் இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

    இதனால் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பருவமழை பெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×