என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகை
- விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்களின் உற்சாகம், கொண்டாட்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
லியோ படத்தை பார்க்க ஜப்பானை சேர்ந்த விஜய் ரசிகை ஒருவர் சென்னை வந்துள்ளார். அவர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் படத்தை பார்க்க நின்று கொண்டிருந்தார். முதல் காட்சி திரையிடப்பட்டதால் அடுத்த காட்சியில் படத்தை பார்க்க காத்திருந்தார். உற்சாக மிகுதியில் காணப்பட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் விஜய்யின் தீவிர ரசிகை. லியோ படத்தை பார்ப்பதற்காகவே ஜப்பானில் இருந்து சென்னை வந்துள்ளேன். விஜய் படம் வெளியாகும்போது அவரது ரசிகர்களின் உற்சாகம், கொண்டாட்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அந்த கொண்டாட்டங்களை நேரில் பார்ப்பதற்காகவே சென்னைக்கு வந்தேன். லியோ படம் பார்க்க வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் இதற்கு முன்பு விஜய் நடித்த மெர்சல், பீஸ்ட், பிகில் ஆகிய படங்களை பார்த்து உள்ளேன். அந்த படங்கள் என்னை கவர்ந்தன.
விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'கொஞ்சம் கொஞ்சம் தெரியும்' என்று கொஞ்சு தமிழில் பதில் அளித்தார்.
இதேபோல் பெங்களூருவை சேர்ந்த மற்றொரு பெண் லியோ படத்தை பார்க்க கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தார். அவர் படம் பார்க்க செல்லும் முன்பு மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் கூறுகையில், 'லியோ படம் பெங்களூருவில் உள்ள தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது. ஆனால் சென்னையில் உள்ள விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அதனால் தான் லியோ படத்தை பார்க்க சென்னை வந்தேன்' என்றார்.






