search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கின
    X

    பாளையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வீடு

    வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கின

    • கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனை சாவடியில் தினமும் இரவு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வழியாக கேரளாவுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் அந்த வாகனங்களில் டிரைவர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பால் சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ குழுவினர் புளியரை சோதனை சாவடிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இரவு பணியை முடித்துவிட்டு காரில் புறப்பட்ட பாளை பெருமாள்புரத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி (வயது 58) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக ஞானகுமாரி இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்து உள்ளார். அவரிடம் இருந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து பிரேமா ஞானகுமாரியிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக பெருமாள்புரத்தில் கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×