search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சோதனைக்கு எதிர்ப்பு- போலீசாருடன் மோதல்: 7 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது
    X

    போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்

    சோதனைக்கு எதிர்ப்பு- போலீசாருடன் மோதல்: 7 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர்.
    • அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீடு உள்பட கோவையில் 9 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு சோதனை நடைபெறும் தகவல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது.

    தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வாசலில் அமர்ந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். சோதனை நடப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் அறிந்து, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

    இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.க்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

    தொடர்ந்து தொண்டர்கள் வாசலில் நின்றபடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு இருந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கு மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×