search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

    • கடந்த மாதம் 24-ந் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • வந்தே பாரத் ரெயிலில் கட்டணம் அதிகம் என்றாலும் முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே விரிவுபடுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் இயக்க கோரிக்கை எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மற்ற ரெயில்களை விட கட்டணம் அதிகம் என்றாலும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ரெயிலில் வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லை-சென்னை, சென்னை-நெல்லை என இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏ.சி. வகுப்பில் ரூ.1,665 என்றும், எக்சிக்கியூட் ஷேர் வகுப்பில் ரூ.3,055 என்றும் வசூலிக்கப்படுகிறது.

    நெல்லை மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.

    அதிலும் காலை நேர பயணம், ரெயில்களில் வழங்கப்படும் உணவு போன்றவற்றால் பெரும்பாலும் குடும்பத்துடன் செல்லவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் குடும்பத்துடன் செல்ல 77 சதவீதம் பேர் ஆர்வம் காட்டி உள்ளனர். அதாவது 100 பயணிகள் இந்த ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதில் 77 பேர் குடும்பத்துடன் செல்கிறார்கள்.

    மேலும் 36 சதவீதம் பேர் 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வந்தே பாரத் ரெயிலில் கட்டணம் அதிகம் என்றாலும் முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி முன்பதிவு டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டன. நேற்றைய நிலவரப்படி காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டி உள்ளது.

    எனவே வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மற்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை விட பயண நேரம் குறைவாக உள்ளது. இதனால் பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை வர உள்ள நிலையில், பலரும் வெளியூர் செல்வார்கள். இதனால் தென் மாவட்ட மக்கள் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எனவே கூடுதல் பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×