என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெய்வேலியில் வீடு-தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கல்: 2 பேர் அதிரடி கைது
- நெய்வேலியை சேர்ந்த பிரபல ரவுடி மகேஷ் என்பவர், கடலூரை சேர்ந்த ஒரு நபர் கொடுத்த வெடிகுண்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
- போலீசார் கைப்பற்றிய வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உஷாரான போலீசார் அவர்களை துரத்தி மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர். உடனே 2 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 பேரும் நெய்வேலி வட்டம் 21-ல் உள்ள ஒரு வீட்டில் பாத்ரூமிலும், நெய்வேலி வட்டம் 4-ல் உள்ள தைல தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் கூறிய தகவலின் பேரில் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உடனே கைப்பற்றிய போலீசார் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் இரும்பு குழாய், கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் நெய்வேலியை சேர்ந்த பிரபல ரவுடி மகேஷ் என்பவர், கடலூரை சேர்ந்த ஒரு நபர் கொடுத்த வெடிகுண்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (வயது 21), நெய்வேலி வட்டம் 21-ஐ சேர்ந்த 14 வயது சிறுவன், நெய்வேலி வட்டம் 21-ஐ சேர்ந்த மகேஷ் (25), பார்த்திபன் (23), கடலூரை சேர்ந்த நபர் ஆகியோர் இந்த வெடிகுண்டுகள் பதுக்கிய விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் அகிலன், 16 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். எனினும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது? இதற்கு மூளையாக இருப்பது யார்? இந்த வெடிகுண்டுகள் பழிக்கு பழி சதித்திட்டத்தில் ஈடுபட பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






