என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சி-சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுமா?
- மதுரையில் இருந்து மாலை நேரத்தில் தேஜஸ் ரெயில் திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
- ஒவ்வொரு நாளும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
திருச்சி:
திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும், பகல் நேரத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
ஒரு ரெயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 1660 பேர் பயணிக்க இயலும். ஆனால் ஒரு ரெயில் இயக்கப்படாத பட்சத்தில் அந்த பயணிகளை சென்னைக்கு அழைத்து செல்ல ஒரு தனி விமானமும், 84 கார்களும், 50 பேருந்துகளும் தேவைப்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் கால விரையமும் ஏற்படுகிறது.
கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் திருச்சி-சென்னை இடையிலான பல்லவன் விரைவு ரெயில் பகல்நேர பயணத்தை தொடங்கியது.
அது கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து பயண தூரத்தை நீட்டித்து காரைக்குடி-சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது இந்த நீட்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதனை மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்கிடையே ரெயில் பயணிகளின் வசதிக்காக கடந்த 2015-16-ம் ஆண்டு சென்னை-திருச்சி இடையிலான ரெயில் தடம் இருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது.
அதன் பின்னரும் கூட பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து எந்தவித புதிய ரெயில்களும் இயக்கப்படவில்லை. திருச்சியில் இருந்து நேரடியாக காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து மாலை நேரத்தில் தேஜஸ் ரெயில் திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. அதிலும் 50 விழுக்காடு பயணிகள் திருச்சியில் இருந்து தான் சென்னைக்கு பயணிக்கின்றனர்.
22 பெட்டிகள் கொண்ட பல்லவன் விரைவு ரெயிலில் மொத்தமாக 1660 பயணிகள் பயணிக்கும் வசதி உள்ளது.
இதில் 2022-23 ஆம் ஆண்டு கணக்கின்படி காரைக்குடியில் இருந்து 92 ஆயிரத்து 298 பயணிகள்,
புதுக்கோட்டையில் இருந்து 57ஆயிரத்து 584 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக புள்ளி விரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் திருச்சி ஜங்சனில் இருந்து 2 லட்சத்து 32ஆயிரத்து 528 பயணிகளும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 9ஆயிரத்து 421 பயணிகளும், லால்குடியில் இருந்து 36ஆயிரத்து 52 பயணிகளும் சென்னைக்கு பயணித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதற்கு ஏற்ப கூடுதல் ரெயில்கள் இதுவரை இயக்கப்படுவதில்லை. ரெயிலில் பயணிக்க இடம் கிடைக்காதவர்கள், விமானங்களையும், கார்களையும், பொது பேருந்துகளையும் பயன்படுத்தி சென்னை நோக்கி பயணிக்கின்றனர்.
பகல் நேரத்தில் சென்னைக்கு செல்லும் பயணிகள், அங்கு பணிகளை முடித்துக்கொண்டு இரவு திருச்சிக்கு திரும்பும் வகையில் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். இதனால் பயணிகளுக்கு பொருள் செலவும் கணிசமாக குறையும்.
பகல் நேரத்தில், திருச்சில் இருந்து சென்னைக்கு எப்போது கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்? என்ற கேள்வியை தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
திருச்சி-சென்னை இடையே குறைவான தூரம் என்பதால் புதிய ரெயில்களை இயக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.
திருச்சியிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் செல்லும் அதிவிரைவு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 5.40 மணிக்கு திருச்சியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்க பரிந்துரை செய்துள்ளோம்.
அதுபோல திருச்சியில் இருந்து சென்னை வழியாக சூரத் நகரத்திற்கு வாரம் ஒரு முறை அதிவிரைவு ரெயிலை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய ரெயில்களை இயக்குவது குறித்து ரெயிவே வாரியம் தான் முடிவு செய்யும் என்றார்.
இதுகுறித்து சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பாலாஜி கூறும்போது, திருச்சியில் ஆன்மீக தளங்கள் அதிகமாக உள்ளது. அதற்கு சென்று உடனடியாக வீடு திரும்புவதற்கு கூடுதல் ரெயில்கள் பகலில் இயக்கினால் வசதியாக இருக்கும் என்றார். திருச்சி வியாபாரி சுலைமான் கூறும்போது கடைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்னைக்கு செல்லும்போது விடுதிகளில் தங்கி நேரத்தை விரயமாக்காமல் இருக்க பகல் நேரத்தில் கூடுதல் ரெயில் இயக்குவது அவசியம் என்றார்.






