search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
    X

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் காட்சி.

    வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    • சேரன்மகாதேவி, அம்பை, கன்னடியன், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 87.95 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 90.58 அடியை எட்டி உள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1112 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகளுக்கு வினாடிக்கு 1204 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 26 மில்லிமீட்டர் மழை பெய்தது. வடக்கு பச்சையாறு அணை பகுதியில் மழை இல்லாததால் அந்த அணைக்கு நீர் வரத்து இல்லை.

    மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 13.25 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதிலும் பெரும்பகுதி சகதியாகவே உள்ளது. அந்த அணையில் தற்போது 6.47 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    சேரன்மகாதேவி, அம்பை, கன்னடியன், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல், வீரவநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாலையில் இடி, மின்னல் பயங்கரமாக இருந்ததால் முன்எச்சரிக்கையாக சிறிது நேரம் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் நேற்று மாலை முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று காலை முதல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    அணைகளை பொறுத்தவரை 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 81.50 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. ராமநதி அணை பகுதியில் 28 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    Next Story
    ×