search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஏழை-எளியவர்கள் பயன்பெற ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு
    X

    விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கியபோது எடுத்த படம்.

    தமிழகத்தில் ஏழை-எளியவர்கள் பயன்பெற ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு

    • நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது.
    • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லையில் மாவட்ட அளவில் சிறப்பு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். விழாவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.56 கோடிக்கு கடன் வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள், பெண்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என ஏராளமானவர்கள் பயன் பெறுகின்றனர். இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது. இதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.

    தமிழ்நாட்டில் ஏழை-எளிய மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ரூ.3½ லட்சம் கோடி பட்ஜெட் போடும் நம் மாநிலத்தில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்குவது என்பது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்சியை எட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 6,500 பயனாளிகளுக்கு ரூ.156 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் கிரகாம்பெல், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×