search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள்
    X

    5 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள்

    • கோவை மாவட்டத்துடன் இணைந்து இருந்த திருப்பூர், கடந்த 2008-ம் ஆண்டு தனியாக புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
    • காங்கயம், தாராபுரம் ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் வளர்ச்சியின் மூலமாக உலக நாடுகளை தன்பக்கம் ஈர்த்த மாநகரம் திருப்பூர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் திருப்பூர் மாநகருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களும் வசிக்கும் மாவட்டம் இதுவாகும்.

    கோவை மாவட்டத்துடன் இணைந்து இருந்த திருப்பூர், கடந்த 2008-ம் ஆண்டு தனியாக புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பூர் பாராளுமன்ற தொகுதி 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோபிச்செட்டிப்பாளையம் பாராளுமன்ற தொகுதியில் இருந்து பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளையும், கோவை பாராளுமன்ற தொகுதியில் இருந்த திருப்பூரை திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என 2 சட்டமன்ற தொகுதிகளாக பிரித்து, திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

    இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும், பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலும், பல்லடம் கோவை பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதேப்போல் உடுமலை, மடத்துக்குளம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியிலும், காங்கயம், தாராபுரம் ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மட்டுமே திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர். மற்ற 6 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திருப்பூர் வடக்கு தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 வாக்காளர்களும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்களும், பவானி தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 வாக்காளர்களும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 வாக்காளர்களும் உள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பேரும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 940 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 503 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    எனவே திருப்பூர் தொகுதி எம்.பி. பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் வெற்றிக்கு ஈரோடு மாவட்ட வாக்காளர்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி என்று பெயர் இருந்தாலும் ஈரோடு மாவட்ட மக்களை பிரசாரம் செய்து கவர்ந்தால் மட்டுமே வெற்றி கை கூடும் நிலை இருக்கிறது. இதனால் பிரதான கட்சிகள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது 2 மாவட்ட மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர்களை தேர்ந்தெடுக்கும் நிலை இருக்கிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,58,786 வாக்காளர்கள் உள்ளனர். காங்கயத்தில் 2,59,652, அவினாசியில் (தனி) 2,83,771, பல்லடத்தில் 3,92,836, உடுமலைபேட்டையில் 2,60,684, மடத்துக்குளத்தில் 2,32,141 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23, 44,810 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெவ்வேறு தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியது இருப்பதால் மிகவும் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

    எனவே தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குள் அமையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×