என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- பேச்சிப்பாறை அணைக்கு 589 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- பெருஞ்சாணி அணைக்கு 566 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவட்டார்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, கோதையாறு, மோதிரமலை, தச்சமலை, கல்லாறு போன்ற பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.
நேற்று குலசேகரம், திற்பரப்பு, சிற்றாறு, கடையாலுமூடு அருமனை, திருவட்டார் போன்ற பகுதிகளில் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது.
மலைப்பகுதியான கோழிப்போர்விளையில் 88.4 மில்லி மீட்டர் மழையும், இரணியலில் 63 மில்லி மீட்டரும், சிவலோகம் பகுதியில் 54.6, அடையாமடை 51.2, பெருஞ்சாணி 47, குளச்சல் 46.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
புத்தன் அணையில் 44.8, முள்ளங்கினாவிளை 32.8,சுருளோடு 30.4, பேச்சிப்பாறை 27, குருந்தன் கோடு 23, கன்னிமார் 21.2, நாகர்கோவில் 20, ஆனைகிடங்கு 16, கொட்டாரம் 15.6, பூதப்பாண்டி 15.4, சிற்றார் 15.4, மாம்பழத்துறையாறு 15, பாலமோர் 11.2, திற்பரப்பு 7.8, மைலாடி 7.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு 589 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 41.47 அடியாக உள்ளதால் 546 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு 566 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணைக்கு 37 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 62 கன அடியும் நீர்வரத்து இருந்த போதிலும் வெளியேற்றம் எதுவும் இல்லை. பொய்கை அணை, மாம்பழத்துறையாறு அணைகளில் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை.
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று 3-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.






