search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிபா வைரஸ் பரவலை தடுக்க குமரி எல்லையில் உள்ள 4 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு
    X

    நிபா வைரஸ் பரவலை தடுக்க குமரி எல்லையில் உள்ள 4 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு

    • நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 4 சோதனை சாவடிகளில் சோதனை நடந்து வருகிறது. களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா, பளுகல் சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வரும் பஸ்களை தடுத்து நிறுத்தி பஸ் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள். மருத்துவ குழுவினர் அங்கேயே முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகளை குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

    கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×