search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை புத்தகக்காட்சி ஜனவரி 6-ந் தேதி தொடக்கம்-  22-ந் தேதி வரை நடைபெறுகிறது
    X

    (கோப்பு படம்)

    சென்னை புத்தகக்காட்சி ஜனவரி 6-ந் தேதி தொடக்கம்- 22-ந் தேதி வரை நடைபெறுகிறது

    • புத்தகக்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
    • 3 நாட்கள் சர்வதேச புத்தகக்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது சென்னை புத்தகக்காட்சியானது வரும் ஜனவரி 6-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனவரி 6-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    விழாவில் 6 பேருக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் முதலமைச்சர் வழங்க இருக்கிறார்.

    மேலும் தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் அதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக்காட்சி நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.


    புத்தகக்காட்சிக்கு 800 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்தகக்காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர சிறிய அளவில் புத்தகங்களை வெளியிடும்

    பதிப்பாளர்களுக்காக மினி அரங்குகளும், திருநங்கை பதிப்பாளர்களுக்கு என சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டு உள்ளன. புத்தகக் காட்சியானது தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

    தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று வருபவர்களும் பயன்பெறும் வகையில் ஜனவரி 22-ந் தேதி வரை புத்தக காட்சி நடத்தப்படுகிறது. நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×