search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது- ஜவுளி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
    X

    நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது- ஜவுளி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

    • நூல் விலையை அடிப்படையாகக் கொண்டு தான் உற்பத்தி செய்யும் துணிகளின் விலை முடிவாகும்.
    • புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. இங்கு வேட்டி, சர்ட், சுடிதார், துண்டு, லுங்கி உள்பட பல்வேறு ஜவுளி வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்வால் விற்பனை இல்லாமல், உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்தன. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நூல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

    நூல் விலையை அடிப்படையாகக் கொண்டு தான் உற்பத்தி செய்யும் துணிகளின் விலை முடிவாகும். கடந்த பல மாதங்களாக நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் துணி உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டது. கூடுதலாக விலை வைத்து துணி விற்பனை செய்தாலும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்துவிட்டன.

    ஆர்டரும் இல்லாததால் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் ஜவுளி தொழில் மிகவும் சரிவைநோக்கி சென்றது. தற்போது நூல் விலை கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் தொழில் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. புதிய ஆர்டர்கள் அதிக அளவு வரும் என எதிர்பார்க்கிறோம். அப்படி வரும் பட்சத்தில் மீண்டும் ஜவுளி உற்பத்தி தொழில் சூடு பிடிக்கும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×