search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று அதிரடியாக கைது
    X

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று அதிரடியாக கைது

    • ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.
    • போலீசார் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குவிய நேரிட்டது.

    சம வேலைக்கு சம ஊதியம், முழு நேர ஆசிரியர் பணி, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகள் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக அரசு பல தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பிறகு அவர் ஆசிரியர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சம வேலைக்கு சம ஊதியம் குறித்து பரிசீலிக்க மூவர் குழு அமைக்கப்படும். சிறப்பாசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,500 அதிகரிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் இதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்தனர்.

    இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார். அதையும் ஆசிரியர்கள் நிராகரித்தனர்.

    போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் நேற்று இரவு அறிவித்தன. அதன்படி ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் கல்வி வளாகத்தில் தொடர்ந்து தங்கியிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த ஆசிரியர் சங்கத்தினர் முடிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை ஆசிரியர்கள் ஏற்கவில்லை.

    தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து இங்குதான் இருப்போம் என்று கூறினார்கள். இதையடுத்து ஆசிரியர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    கலைந்துசெல்லாவிட்டால் கைது செய்வோம் என்று சொல்லி கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கினார்கள். இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்றாலும் போலீசார் கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் போட்டனர். சில ஆசிரியைகள் கண்ணீர் விட்டு கதறினார்கள். அவர்களுடன் இருந்த குழந்தைகளும் கதறின.

    என்றாலும் போலீசார் குண்டுகட்டாக ஆசிரியர்களை கைது செய்து அழைத்து சென்றனர். ஆசிரியர்களை அழைத்து செல்வதற்காக பஸ், வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களில் ஆசிரியர்கள் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.

    சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 500 பேர் பெண்கள் ஆவர். பிறகு அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். புதுப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    சிந்தாதிரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், ராயப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடங்களிலும் ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 7 இடங்களில் ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதால் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் இன்று அதிகாலை சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

    கைது செய்யப்பட்டாலும் தங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் ஆகியோர் கூறியதாவது:-

    அதிகாலையில் போலீஸ் படையை குவித்து போராட்ட களத்தில் இருந்த ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வெளியேற்றி உள்ளனர். இது ஜனநாயக கொலைக்கு சமம். எங்களை சிறையில் போடும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். கலைந்து போக மாட்டோம். சமுதாய கூடங்களிலும் எங்கள் போராட்டம் தொடரும். சாப்பிடாமல் இருப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×