search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சுழி அருகே டீக்கடை தொழிலாளி கொலை: சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது
    X

    திருச்சுழி அருகே டீக்கடை தொழிலாளி கொலை: சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது

    • கொலை செய்யப்பட்ட அன்பரசனுக்கும், பாண்டி முருகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
    • போலீசார் பாண்டி முருகன் மற்றும் கொலையை மறைக்க உதவிய வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புலியூரான்-பி. தொட்டியங்குளம் இடையிலான ரெயில்வே தண்டவாள பகுதியில் சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க நபர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக புலியூரான் கிராம நிர்வாக அலுவலர் பவானி தேவி கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தது. எனவே மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டவர் திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை தொழிலாளி அன்பரசன் (வயது 50) என தெரியவந்தது.

    அன்பரசனை கொலை செய்தது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க திருச்சுழி போலீஸ் டி.எஸ்.பி. ஜெகநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அன்பரசனின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் பழகியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சின்ன கட்டங்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாண்டி முருகன் (25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    கொலை செய்யப்பட்ட அன்பரசனுக்கும், பாண்டி முருகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி மது குடித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அன்பரசனும் பாண்டி முருகனும் சேர்ந்து சின்ன கட்டங்குடி பகுதியில் உள்ள தோப்பு வீட்டில் மது அருந்தினர். 2 பேருக்கும் போதை தலைக்கேறியது. அப்போது அன்பரசன் தரக்குறைவாக பாண்டி முருகனை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி முருகன் அருகில் இருந்த கட்டையை எடுத்து அன்பரசனை சரமாரியாக தலையில் அடித்து தாக்கினார். இதில் நிலைகுலைந்து விழுந்த அன்பரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி முருகன் உடனே தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் வீரபாண்டி (32), சோலை மகன் ராஜபாண்டி (27) மற்றும் பாண்டி முருகனின் சகோதரர்கள் மாதவன் (23), அன்பழகன் (32) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் கொலை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பிணத்தை அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.

    அதன்படி அன்பரசனின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புலியூரான்-பி. தொட்டி யங்குளம் பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் தற்கொலை செய்து கொண்டது போல போட்டு விட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் பாண்டி முருகன் மற்றும் கொலையை மறைக்க உதவிய வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×