search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விடுமுறை நாளையொட்டி ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    விடுமுறை நாளையொட்டி ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கோடை காலம் தொடங்கி உள்ளதால், ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து உள்ளது.
    • பூங்காவில் உள்ள முயல், மான், பாம்பு பண்ணை போன்றவற்றை சிறுவர்களும் பெரியவர்களும் கண்டுகளித்து மணமகிழ்ச்சி பெறுவார்கள்.

    சேலம்:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநிலம், மாவட்டங்களை சார்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    கோடை காலம் தொடங்கி உள்ளதால், ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    அதுபோல் இன்றும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்தனர். குறிப்பாக காதல் ஜோடிகள், புதுமண தம்பதிகள் ஏற்காட்டில் அதிக அளவில் காண முடிந்தது.

    அவர்கள் ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள், ஏற்காட்டில் பிரசித்தி பெற்ற காபி, அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கினர். இதனால் இங்குள்ள கார்டன்கள், கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

    சுற்றுலாத்தலமான மேட்டூருக்கு மேட்டூர் அணையை ஒட்டி அமைந்துள்ள மேட்டூர் பூங்காவிற்கு அரசு விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். மேட்டூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பலர் காவிரி ஆற்றில் நீராடி பூங்கா அருகே அமைந்துள்ள அணைக்கட்டு முனியப்பன் சாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். ஒரு சிலர் ஆடு, கோழி ஆகியவற்றை முனியப்ப சாமிக்கு பலியிட்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

    அதனை அடுத்து தாங்கள் சமைத்த உணவினை சமைத்து பூங்காவிற்கு எடுத்துச் சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள். சிறுவர் சிறுமிகள் ராட்டினம், சர்க்கிள், சீசா பலகைபோன்ற விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்வார்கள். பூங்காவில் உள்ள முயல், மான், பாம்பு பண்ணை போன்றவற்றை சிறுவர்களும் பெரியவர்களும் கண்டுகளித்து மணமகிழ்ச்சி பெறுவார்கள்.

    இதன் அடிப்படையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையிலிருந்து மேட்டூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. காலையில் வரத் தொடங்கிய கூட்டம் படிப்படியாக அதிகரித்து மாலையில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.

    Next Story
    ×