என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மான் கறி சாப்பிட்டதாக தொழிலாளிக்கு சரமாரியாக அடி,உதை- வனத்துறையினரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
    X

    மான் கறி சாப்பிட்டதாக தொழிலாளிக்கு சரமாரியாக அடி,உதை- வனத்துறையினரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலக்கோடு வனப்பகுதியில் மானை வேட்டையாடிதாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • சிவனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கால் மற்றும் கை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சோளகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் மகன் சிவன் (வயது 47). தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு.

    இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலக்கோடு வனப்பகுதியில் மானை வேட்டையாடிதாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு ரூ.85 ஆயிரம் அபாரதம் விதித்து விடுவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் அதே பகுதியில் கடந்த வாரம் மான்கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அல்லிமுத்து என்பவர் மானை வேட்டையாடி கறி விற்பனை செய்ததாக தெரியவந்தது. உடனே அவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்ததில் சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிவன் என்பவருக்கு கறிவிற்பனை செய்ததாகவும், அவர் அதனை வாங்கி சாப்பிட்டதாகவும் வாக்கு மூலம் அளித்தார்.

    இதனைதொடர்ந்து சிவனை கைது செய்வதற்காக வனத்துறை அதிகாரி ஆலயமணி தலைமையிலான குழுவினர் தேடிவந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை சிவன் சோளக்கொட்டாய் கிராமத்திற்குள் வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கால் மற்றும் கை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது.

    அப்போது அங்கு திரண்டு வந்த கிராம மக்கள் சிவனை என்ன காரணத்திற்கு அடித்து துன்புறுத்தீர்கள் என்று கேட்டு வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே காயமடைந்த சிவனை மீட்டு கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றனர். அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு சிவனை கிராம மக்கள் இரு சக்கர வாகனத்தில் வனத்துறையினரை மீறி அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அங்கு வனத்துறையினர் அரூர் போலீசார் உதவியுடன் சிவனை கைது செய்ய முயன்றனர். அங்கும் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×