search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்க வேண்டும்- விக்கிரமராஜா கோரிக்கை
    X

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்க வேண்டும்- விக்கிரமராஜா கோரிக்கை

    • சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அந்த சமயத்தில் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது என்பது அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

    7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் திடீரென அறிவித்திருக்கின்றது.

    இது சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக்கக்கூடிய எளிமையான மக்களிடம் இருந்து, வணிகர்களிடமே அன்றாட தேவைக்காக புழக்கத்திற்கு கொண்டு வரப்படும்.

    இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை ஏற்படும்போது பொது மக்களுக்கும்-வணிகர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும். மேலும், சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.

    இவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக, பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்களின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்திட வேண்டும்.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத்திற்கு கொண்டு வந்து, அதனை மாற்றிக் கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகாசத்துடன் தற்போது அறிவித்துள்ள 2023 செப்டம்பர் 30 என்பதை-டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளித்தும், வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து பொதுமக்களும் வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் நிலையை உருவாக்கி மத்திய அரசுக்கு எந்தவித அவப் பெயரும் ஏற்படாதவண்ணம் விதிகளை உடனடியாக அறிவித்திடுமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் நலன் கருதி வேண்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×