search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம்- வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
    X
    பண்ணாரி சோதனை சாவடியில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

    ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம்- வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    • தமிழகம் முழுவதும் அரசு துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 5-வது மாடியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சுந்தர் (57).

    இவர் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அமைத்தல், கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதாக புகார் இருந்து வந்தது.

    இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் உதவி செயற்பொறியாளர் சுந்தர் ஊராட்சிகளில் ஆய்வு பணிகளுக்காக சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கி வந்துள்ளதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி. ராஜேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு 1 மணி அளவில் அதிரடியாக ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

    அப்போது அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சுந்தர் மற்றும் சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர். சுந்தரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் இருந்தது. பின்னர் அறை முழுவதும் சோதனை நடத்தினர்.

    இதில் வேறு பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஈரோடு பழையபாளையத்தில் உள்ள சுந்தரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் பணிகளுக்காக கமிஷன் வாங்கி இருப்பது தெரியவந்தது. அலுவலகம், வீடு என 2 இடங்களிலும் நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய சோதனை அதிகாலை 5 மணி வரை நடந்தது. போலீசாரின் சோதனையில் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    இதுதொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி செயற்பொறியாளர் சுந்தரத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் அரசு போக்குவரத்து துறை என 3 சோதனை சாவடிகள் உள்ளன. தமிழக-கர்நாடகா இணைப்பு சாலையில் இந்த சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் இங்கு சோதனை செய்த பிறகு செல்ல அனுமதி அளிக்கப்படும்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் ஈரோட்டில் இருந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் பண்ணாரி சோதனை சாவடிக்கு வந்தனர். அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடிக்குள் நுழைந்து கோப்புகளையும், வாகன பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது மேஜையில் இருந்த கணக்கில் வராத ரூ. 40 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போக்குவரத்து ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் அதிகாரிகள் சிலர் பணியில் இருந்தனர். ரூ.40 ஆயிரம் பற்றி ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×