search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க எதிர்ப்பு- கம்யூ., வி.சி.கவினர் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க எதிர்ப்பு- கம்யூ., வி.சி.கவினர் போராட்டம்

    • தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்.
    • பா.ஜ.க. ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகிறார் என கூறி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் பெரியார் கலையரங்கில் தொடங்கியது.

    இவ்விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

    முன்னதாக இவ்விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சேலம் மாநகர போலீசார், இந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். கவர்னர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டக்கூடாது. அவ்வாறு கருப்பு கொடி காட்டும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    ஆனாலும் அவர்கள் கருப்பு கொடியை காட்டியே தீருவோம் என கூறினார்கள். அவருக்கு கருப்பு கொடி காட்டுவது எங்களின் உரிமை என்றனர். இதனால் போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இன்று காலை திட்டமிட்டப்படி சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இதையடுத்து இன்று காலை சுமார் 11 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விழா நடக்கும் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கூடாது என கூறி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலை கழகம், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கட்சி கொடிகள், கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார். பா.ஜ.க. ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகிறார் என கூறி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் னர். அவர்கள் கவர்னர் வரும் சாலையில் வந்து விடக்கூடாது என்பதற்காக இரும்பு பேரிகார்டு அமைத்து அரண் போல் நின்று தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வழியாக கவர்னரின் கார் வந்தது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்குள் கார் சென்றது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இங்கு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, டி.ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாநகர துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மட்டும் 500 போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×