என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி
    X

    வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி

    • திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து வருகிறார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

    வாணியம்பாடி:

    தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). கடந்த 2021-ம் ஆண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார்.

    கடந்த 7 மாதமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து வருகிறார்.

    இவர்களது காதலுக்கு ராஜ்குமாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ராஜ்குமார் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். வழக்கு சம்பந்தமாக அனைவருமே வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு அவரது காதலியான பெண் சப்-இன்ஸ்பெக்டர் போன் செய்தார். ராஜ்குமார் போலீஸ் நிலையத்திற்கு வெளியே சென்று வீடியோ கால் மூலமாக போனில் பேசினார். நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

    திடீரென அவருக்கும் போனில் பேசிய காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ராஜ்குமார் ஆவேசமடைந்தார். போனில் கோபமாக பேசியபடி போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்.

    அவரது இருக்கை அமைந்துள்ள சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்று கதவை வேகமாக பூட்டினார். ஆவேசமாக பேசி சென்றதால் பயந்து போன அவரது காதலியான பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திற்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சென்று அறை கதவை திறக்கும்படி வெளியில் இருந்து கூறினர்.

    ஆனால் உள்ளே இருந்த ராஜ்குமார் ஒரு நீளமான துண்டை எடுத்து மின்விசிறியில் கட்டி தனது கழுத்தில் மாட்டினார்.

    அவர் நீண்ட நேரமாக கதவை திறக்காதால் போலீசார் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    மின்விசிறியில் தூக்கில் தொங்க முயன்ற ராஜ்குமாரை மீட்டனர். மேலும் இது குறித்து டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் ஒரு மணி நேரம் ராஜ்குமாருக்கு போலீசார் தற்கொலை செய்யக்கூடாது என்பது குறித்து கவுன்சிலிங் அளித்தனர்.

    காதல் தகராறில் ராஜ்குமார் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்களிடம் நேரடியாக ஒப்படைக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×