search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்டு வைக்கும் டேட்டிங் செயலிகள்... ஆன்லைன் காதலர்களே உஷார்
    X

    வேட்டு வைக்கும் டேட்டிங் செயலிகள்... ஆன்லைன் காதலர்களே உஷார்

    • அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

    இறு காதலர் தினம்.

    உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதன்படி இன்று காதலர்கள் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், மால்கள் ஆகியவற்றில் திரண்டு காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    காதலர் தினத்தில் தங்களது மனதை கொள்ளை கொண்ட மங்கையர்களுக்கு பிடித்தமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த வாலிபர்கள் பலர் இந்த நாளை மறக்க முடியாத நாளாக எப்போதும் மனதில் வைத்திருக்கும் வகையிலும் பல்வேறு மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபட்டனர்.

    இப்படி காதலர் தினத்தைப் பற்றி ரசனையோடு சொல்லிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் நேரில் பார்த்து பழகி காதலிப்பவர்களுக்கு மத்தியில் பார்க்காமலேயே ஆன்லைனில் பழகி காதலிப்பவர்களும் தற்போது அதிகரித்து வருகிறார்கள்.


    ஆனால் இதுபோன்ற காதல் கடைசியில் மோசடி காதலாகவே முடிந்து விடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். டேட்டிங் செயலிகள் மூலமாக பேசி பழகுவது என்பது இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் ஒருவித போதையாகவே மாறிப் போய் இருக்கிறது.

    டேட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலமாக பெண்களுக்கு வலை விரிப்பதற்காகவே ஒரு கும்பல் இணைய தளங்களை 24 மணி நேரமும் பயன்படுத்தி வருகிறது.

    அதே நேரத்தில் பெண் குரலில் பேசி வாலிபர்களை மயக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாக கூறிவிட்டு பின்னர் சுங்கஇலாகா அதிகாரி போல பேசி மிரட்டி பணத்தை பறித்து விடுகிறார்கள்.

    குறிப்பிட்ட தொகையை லட்சங்களில் சொல்லி இந்த பணத்தை அனுப்பாவிட்டால் நீங்கள் சிறை செல்வது உறுதி. உங்களுக்கு வந்திருக்கும் பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளன. நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் இத்தனை லட்சங்களை நீங்கள் உடனடியாக அனுப்ப வேண்டும்.

    இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வரும் என்று கூறியதைக் கேட்டு இன்று பல இளைஞர்களும் இளம்பெண்களும் லட்சங்களை வாரி இறைத்து விட்டு அதனைத் திரும்பப் பெறுவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய பிறகே டேட்டிங்கில் நம்மோடு பழகிய நபர் மோசடி ஆசாமி என்பது சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கோ இளம்பெண்களுக்கோ தெரிய வருகிறது. இதனால் டேட்டிங்கில் யாருடன் பழகுகிறோம் என்பதை நேரில் சந்தித்து உறுதி செய்து கொண்ட பின்னரே தங்களது காதலை இன்றைய வாலிபர்களும் இளம்பெண்களும் தொடர வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நாம் பின்னர் சந்திக்கலாம் சில மாதங்கள் என்னால் நேரில் வர இயலாது. அதன் பிறகு நாம் இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று ஆன்லைனில் பழகும் ஆணோ, பெண்ணோ கூறினால் அதனை முழுமையாக நம்பி விட வேண்டாம் என்றும் அது போன்ற நபர்கள் நிச்சயம் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது டேட்டிங் செயலிகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதவிதமான பெயர்களில் பல்வேறு டேட்டிங் செயலிகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகள் மூலமாகவே மோசடி பேர் வழிகள் காதலன் போலவோ அல்லது காதலி போலவோ போலியான புகைப்படங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக மோசடியில் ஈடுபடும் வாலிபர்கள் பெண் குரலில் பேசுவதுடன் அழகான புகைப்படங்களை டி.பி.யாக வைத்துக் கொண்டும் இளம்பெண்களுக்கு வலை விரிக்கிறார்கள். இதுபோன்று தமிழகத்திலும் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


    70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி அதன் மூலமாக பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்து உள்ளது. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை நம்பி பலர் ஏமாந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 26 சதவீத இந்தியர்களில் ஒருவர் இது போன்ற மோசடியை எதிர்கொண்டுள்ளார்.

    காதலர் தினத்தை ஒட்டி காதலர் தின பரிசு தருவதாக கூறி மோசடி கும்பல் டேட்டிங் செயலிகள் மூலமாக வலை விரித்து இருப்பதும் அதன் மூலமாக பலர் தங்களது பணத்தை இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அனைவரும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை குறி வைத்து இந்த ஆன்லைன் டேட்டிங் செயலி செயல்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் இணையதள பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாகவே இந்த காதல் மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த ஏ.ஐ தொழில்நுட்பமும் டேட்டிங் செயலிகளும் மேலும் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இதுபோன்ற டேட்டிங் செயலிகள் மூலமாக அரங்கேறும் மோசடிகள் 400 சதவீத அளவுக்கு அதிகரித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படி டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மூன்று விதமான மோசடிகளை திரை மறைவில் இருந்தபடியே மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

    ஆன்லைனில் உருகி உருகி காதலிப்பதாக கூறிவிட்டு தான் காதலிக்கும் பெண்ணுக்கு அவரது முகவரியில் பரிசு பொருள்களையும் அனுப்பி விட்டு பின்னர் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி பார்சலில் வந்திருப்பது தடை செய்யப்பட்ட பொருள் எனக் கூறி அடுத்த நிமிடமே ஆன்லைன் காதலன் வில்லனாக மாறிவிடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

    டேட்டிங் செயலிகளை பயன்படுத்தும்போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் போலீசார். இந்த மோசடி ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க... வேறு வகையான மோசடியையும் போலீசார் குறிப்பிடுகிறார்கள்.

    சில சேமிப்பு திட்டங்களை கூறி அதில் நீங்கள் முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்றும் மனதுக்கு பிடித்தவர்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி பின்னர் இரக்கமின்றி பழகியவர்களை அதில் சிக்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    இப்படி மோசடி சம்பவங்கள் ஆன்லைனில் அரங்கேறி வரும் நிலையில் பல பெண்கள் தங்களது கற்பையும் பறிகொடுத்து விட்டு நிற்கிறார்கள் என்பதே வேதனையின் உச்சமாகும். ஆன்லைன் மூலமாக பேசி பழகும் வாலிபர்கள் பலர் தங்களது வேலை முடிந்ததும் இளம்பெண்களை கழற்றி விட்டு விட்டு தலைமறைவாகிவிடும் சம்பவங்களும் அரங்கேறி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

    இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் புகார் அளித்து மோசடி பேர்வழிகள் மீது கற்பழிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்படி டேட்டிங் செயலிகள் பல நேரங்களில் வேட்டு வைப்பதாகவே மாறி இருக்கின்றன.

    ஆன்லைனில் காதலிப்பவரா நீங்கள்? நிச்சயம் உஷாராக இருக்க வேண்டும் என்பது சைபர் கிரைம் போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.

    காதலர் தினமான இன்று யாருடன் பழகுகிறோம் என்பதை இளம்பெண்கள் பலமுறை யோசித்து பார்க்க வேண்டும் அப்போதுதான் காதல் மோசடி வலையை விரித்திருக்கும் கும்பலில் பிடியில் இருந்து தப்ப முடியும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×