என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- ஏற்காடு ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
- குழுவாக வந்திருந்த பயணிகள் மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகளில் குதூகலமாக சவாரி செய்தனர்.
ஏற்காடு:
கோடை விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த வண்ண உள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா, பக்கோடா பாய்ண்ட், அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இங்கு பல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனால் இங்குள்ள ஊஞ்சல்கள், சறுக்குகள் உள்ளிட்டவைகளில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
ஏற்காடு ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால், படகு குலாம் களை கட்டியது. குழுவாக வந்திருந்த பயணிகள் மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகளில் குதூகலமாக சவாரி செய்தனர். மேலும், மிதி படகு, பெடல் படகுகளில் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருந்து, சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கோடை விழாவையொட்டி ஆண்டுதோறும் மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம். இது மட்டுமின்றி உள்ளூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக அண்ணா பூங்கா விளங்கி வருகிறது. மே மாதம் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சிக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள இருக்கைகள், ஊஞ்சல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்திலும் தொழிலாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.






