search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டி- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    ஊட்டி- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி:

    சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும் கோடை காலம் என்பதால் குளிர் சீதோஷ்ணநிலை நிலவும் ஊட்டிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த 2 மாதங்கள் சீசன் காலங்களாக கருதப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைவர்களின் பிரசாரம் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை என நீடித்தது. இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. நேற்றுமுன்தினம் பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சனிக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து இருந்தனர். அதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.

    அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. தாவரவியல் பூங்காவில் வெளியூர்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே அமர்ந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஊட்டியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி பயணித்தன. நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன.

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர். மலைரெயிலில் பயணிக்க முன்பதிவு செய்வது அவசியம் ஆகும். இந்த ரெயிலில் அடுத்த மாதம் முன்பதிவு நிரம்பி விட்டதாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலிலும் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதியது. முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் வாகனங்கள் வருகையால் கொடைக்கானலில் இன்று போக்குவரத்து நெரிசலும் நிலவியது.

    Next Story
    ×