search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரஸ் தலைவர் தேர்தல்- சத்தியமூர்த்தி பவனில் நாளை 711 பேர் வாக்களிக்கிறார்கள்
    X

    காங்கிரஸ் தலைவர் தேர்தல்- சத்தியமூர்த்தி பவனில் நாளை 711 பேர் வாக்களிக்கிறார்கள்

    • வாக்குப்பதிவுக்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நாளை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் நாளை (திங்கள்) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரும் களத்தில் மோதுகிறார்கள்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில தலைவர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள். இந்தியா முழுவதும் 9,300 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்க தேவையான ஓட்டுப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல், ஓட்டு சீட்டுகள் டெல்லியில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் 711 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவுக்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஓட்டுச்சீட்டு வழங்கப்படும். அந்த ஓட்டுச்சீட்டில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரது பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றுள்ளது.

    ஓட்டுச்சீட்டில் கவுண்டர் பாயிலில் வாக்காளர் பெயர், வரிசை எண், பதவி உள்ளிட்ட விபரங்கள் நிரப்பப்பட்டு தேர்தல் அதிகாரி கையெழுத்து போட்டு வாக்காளரிடம் வழங்கப்பட்டுவிடும்.

    ஓட்டுச்சீட்டை பெற்றுக்கொண்டு மறைவிடத்துக்கு சென்று யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவரது பெயருக்கு எதிரில் 'டிக்' செய்து பெட்டியில் போட வேண்டும்.

    தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அதிகாரியாக பிரதாப் பானுசர்மா, உதவி தேர்தல் அதிகாரிகளாக கேரளாவை சேர்ந்த சனல், கர்நாடக எம்.எல்.ஏ. அஞ்சலி ஆகியோர் வந்துள்ளார்கள். பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை இரவே டெல்லி கொண்டு செல்லப்படும்.

    20-ந்தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். அப்போது பதிவான வாக்குகள் அனைத்தையும் மொத்தமாக கொட்டி 100 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டப்படும். அதன்பிறகு பிரித்து வேட்பாளர் வாரியாக பிரித்தெடுத்து எண்ணப்படும்.

    எந்த மாநிலத்தில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்பது தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×