search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று இரவு சந்திர கிரகணம்: சென்னை- புறநகர் கோவில்களில் இன்று  முன்கூட்டியே நடை அடைக்கப்படுகின்றன
    X

    இன்று இரவு சந்திர கிரகணம்: சென்னை- புறநகர் கோவில்களில் இன்று முன்கூட்டியே நடை அடைக்கப்படுகின்றன

    • அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • நாளை அனைத்து கோவில்களிலும் அதிகாலை நேரத்தில் புனித நீர் தெளித்து சுத்தம் செய்து பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சென்னை:

    சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ உள்ளது. இன்று (சனிக்கிழமை) இரவு 1.05 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் மத்திய காலம் இரவு 1.44 மணி ஆகும். இரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 1 மணி 18 நிமிடங்கள் நீடிக்கிறது.

    சந்திர கிரகணத்தையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று இரவு முன் கூட்டியே நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு நாளை காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சந்திர கிரகணத்தையொட்டி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பிறகு நாளை அதிகாலையில் கோவில் சுத்தம் செய்யப்படுகிறது. நாளை காலை 6 மணிக்கு பரிகார பூஜை நடக்கிறது. காலை 7 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அப்போது அன்னத்தால் சாமியை அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த பிறகு காலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருமுல்லைவாயல் கொடியிடையம்மன் ஆலயத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை காலையில் பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலின் நடை இன்று இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். மேலும் நாளை காலை 6 மணிக்கு உற்சவர் வீரராகவர் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. பின்னர் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று இரவு 8 மணி முதல் நடை சாத்தப்பட்டு நாளை காலை 6 மணிக்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது. பொன்னேரி சிவன் கோவிலில் இன்று இரவு 7.30 மணி முதல் நடை சாத்தப்பட்டு நாளை காலையில் சுத்தம் செய்து மீண்டும் வழக்கம் போல் திறக்கப்படுகிறது.

    மீஞ்சூர் அடுத்த காளியம்பாக்கம் அரங்கநாதர் பெருமாள் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் நாளை காலை 7 மணிக்கு திறக்கப்படுகிறது. பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி முருகன் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடை சாத்தப்பட்டு நாளை காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு நவாபரண பூஜை நடைபெறுகிறது. பின்னர் 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், வழக்கத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சந்திர கிரகணத்தை முன்னிட்டு சற்று முன்னதாகவே அன்னாபிஷேகம் நடைபெற்று இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை அனைத்து கோவில்களிலும் அதிகாலை நேரத்தில் புனித நீர் தெளித்து சுத்தம் செய்து பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    Next Story
    ×