search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போர் நடக்கும் சூழலில் இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்: தமிழக மாணவர் பேட்டி
    X

    போர் நடக்கும் சூழலில் இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்: தமிழக மாணவர் பேட்டி

    • இஸ்ரேலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 30 பேர் அயலக தமிழர் நல வாரியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
    • 30 பேரும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சென்னை:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் இஸ்ரேலில உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசின் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ள நிலையில், உதவிகள் தேவைப்பட்டால், 97235226748 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் தமிழர் மணிகண்டன் வீடியோவில் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    எல்லோருக்கும் வணக்கம், நானும் என்னுடன் படிக்கும் தினேஷ் பாபுவும் ஆராய்ச்சி படிப்புக்காக இஸ்ரேல் வந்திருந்தோம். நாங்கள் இருவரும் பென்கொரியன் பல்கலைக்கழகத்தில் இருக்கிறோம்.

    இங்கு நேற்று காலையில் இருந்து போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகே ஹர்பன்ட்ஸ் நகரத்தில் இருந்து எங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். அரசு முழு உதவிகளையும் செய்கிறது.

    எங்களுக்கு இ-மெயில் மூலம் அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளை தருகிறார்கள். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டால், தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

    இஸ்ரேலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 30 பேர் அயலக தமிழர் நல வாரியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த 30 பேரும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    அங்கு போர் தீவிரம் அடைவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டால் தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    எனவே உதவி தேவைப்படுபவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 044-28515288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் அங்குள்ள தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு கீழ்கண்ட அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

    அவை வருமாறு:

    +91-87602 48625

    +91-99402 56444

    +91-96000 23645.

    Next Story
    ×