search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.ஆர்.பாலு மகன் ராஜா அமைச்சர் ஆகிறார்- மா.சுப்பிரமணியன் இலாகா மாற்றப்படலாம்
    X

    டி.ஆர்.பாலு மகன் ராஜா அமைச்சர் ஆகிறார்- மா.சுப்பிரமணியன் இலாகா மாற்றப்படலாம்

    • டெல்டா பகுதி எம்.எல்.ஏ.க்களில் மேலும் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • திருவிடைமருதூர் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் கோவி.செழியனை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியபடி உள்ளது.

    அமைச்சரவை மாற்றத்தில் யார்-யாருக்கு வாய்ப்பு கிடைக்கும், யார்-யார் மாற்றப்படுவார்கள் என்றெல்லாம் உறுதி செய்யப்படாத தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் உலாவந்து கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் உறுதியாக நடைபெறும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாற்றத்தின்போது சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

    இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 3 அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகிய 3 பேரும் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    இந்த 3 பேருக்கு பதில் அமைச்சரவையில் 3 பேர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். அவர்கள் 3 பேரும் புதுமுகங்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த 3 பேர் யார் என்பதில்தான் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சில இளைஞர்கள் முதல் தடவையாக எம்.எல்.ஏ.வாகி தகுதியும் திறமையுடனும் உள்ளனர்.

    அவர்கள் பற்றிய தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கயல்விழிக்கு பதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இவர் ஏற்கனவே அதே இலாகாவை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

    தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்டகால எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார். அவர் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக கடந்த பல தடவை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

    எனவே தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமின்றி அவருக்கு சற்று வலுவான இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

    டி.ஆர்.ராஜா போலவே சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எழிலனுக்கும் அமைச்சராக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை நாகநாதன் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர். பல புரட்சி திட்டங்களை வடிவமைத்து கொடுத்தவர்.

    எனவே எழிலன் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான நல்ல எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி மேம்பாட்டு பணிகளில் எழிலன் சிறப்பான முறையில் செயல்படுவதால் அவரை அமைச்சராக்கும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருப்பதாக தி.மு.க. மூத்த தலைவர்களில் பலரும் உறுதிப்படுத்தினார்கள்.

    டெல்டா பகுதி எம்.எல்.ஏ.க்களில் மேலும் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு திருவிடைமருதூர் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் கோவி.செழியனை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    கோவி.செழியன் தற்போது சட்டசபை தி.மு.க. கொறடாவாக உள்ளார். அவர் அமைச்சராகும் பட்சத்தில் தி.மு.க. கொறடா பதவி வேறு ஒருவருக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

    சில அமைச்சர்கள் தங்களது இலாகாவை மாற்ற வேண்டும் என்று முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளன.

    சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோரது இலாகாக்கள் மாற வாய்ப்புள்ளது. அதுபோல கல்வித்துறையை கவனிக்கும் பொன்முடி அல்லது அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரில் ஒருவரது இலாகா மாறும் என்று பேச்சு அடிப்படுகிறது.

    சில அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். செயல்பாடுகள் அடிப்படையில் அவர்களது அமைச்சர் பதவியும் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான 2 ஆடியோக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின. எனவே அமைச்சர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் நீக்கப்படலாம் என்று கருதப்பட்டது.

    ஆனால் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. தற்போதைக்கு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்படக்கூடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    எனவே துணை முதலமைச்சர் பற்றி அமைச்சரவை மாற்றத்தின் போது எந்த தகவலும் இருக்காது என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×