search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரிவினைவாத கட்சி என்று தி.மு.க.வை களங்கப்படுத்த கவர்னர் முயற்சி செய்தார்- டி.கே.எஸ். இளங்கோவன்
    X

    பிரிவினைவாத கட்சி என்று தி.மு.க.வை களங்கப்படுத்த கவர்னர் முயற்சி செய்தார்- டி.கே.எஸ். இளங்கோவன்

    • தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
    • கடைசியில் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான விளக்கம் அளித்து விட்டார்.

    சென்னை:

    தமிழக கவர்னர். ஆர்.என். ரவிக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது.

    இதன் உச்சககட்டமாக தமிழ்நாடு என்று சொல்வதற்கு பதில் தமிழகம் என்ற வார்த்தையை கவர்னர் பயன்படுத்த தொடங்கினார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார்.

    எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று கூறி இருந்தார்.

    எனது பேச்சின் அடிப்படை புரியாமல் கவர்னர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாத பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்றும் கவர்னர் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    கவர்னர் ஆர்.என்.ரவி தமிழை பற்றி உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளாமல் யாரோ எழுதி கொடுப்பதை பொது வெளியில் சொல்கிறார். திருக்குறளை தப்பாக மொழி பெயர்த்தனர் என்று ஆரம்பத்தில் பேசி வந்தார்.

    திராவிடம் என்ற வார்த்தை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த வார்த்தை என்ற அர்த்தத்தில் பேசினார். ஆனால் அதற்கு முன்பே திராவிடம் இருக்கிறது. திராவிடம் என்ற வார்த்தைைய சங்கராச்சாரி யாரே சொல்லி உள்ளார்.

    தி.மு.க.வை பிரிவினைவாத கட்சி மாதிரி சித்தரிக்க கவர்னர் நினைத்தார். ஆனால் அது எடுபடவில்லை. இப்போது நாங்கள் தனிநாடு கோரவில்லை. 1964-ம் ஆண்டே அதை தெளிவுப்படுத்திவிட்டோம்.

    தமிழ்நாடு என்று நாம் சொல்வதால் தனிநாட்டுக்காக போராடும் சக்தியாக தி.மு.க.வை தவறாக சித்தரிக்கலாம் என்ற எண்ணத்தில் தமிழகம் என்ற வார்த்தை தான் பொருத்தமானது என்று கவர்னர் பேசி இருந்தார்.

    ஆனால் அவர் நினைத்தது வேறு. நடந்தது வேறு. கடைசியில் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான விளக்கம் அளித்து விட்டார்.

    டெல்லி மேலிடம் சொன்னதின் பேரிலேயே அவர் அந்த விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

    இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

    Next Story
    ×