search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிதி நிறுவன அதிபரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த கார் வியாபாரி கைது
    X

    நிதி நிறுவன அதிபரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த கார் வியாபாரி கைது

    • திருப்பூரில் தங்கியிருந்த கொள்ளையர்கள் சங்கமேஸ்வரன் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளனர்.
    • நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் ஓடக்காடு ராயபண்டாரம் வீதியைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (வயது 63). சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா் தனக்கு சொந்தமான வீட்டில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். கடந்த 12-ந்தேதி சங்கமேஸ்வரன் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு முகக்கவசம் அணிந்து வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் 4 போ் கதவை உள்புறமாக பூட்டினர்.பின்னா் சங்கமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கட்டிப்போட்டனா். மேலும், அவரது மகள் ஷிவானியை மற்றொரு அறையில் போட்டு பூட்டினா். பின்னா் வீட்டில் இருந்த ரூ.30 லட்சம், 40 பவுன் நகை ஆகியவற்றைக கொள்ளையடித்து விட்டுத் தப்பிச்சென்றனா்.அவற்றின் மதிப்பு ரூ.50லட்சம் இருக்கும்.

    இதுகுறித்து ஷிவானி தனது மடிக்கணினி மூலமாக அமெரிக்காவில் உள்ள தனது சகோதரியை தொடா்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாா். இதன் பின்னா் ஷிவானியின் சகோதரி திருப்பூரில் உள்ள நண்பருக்கு தகவல் கொடுத்ததன்பேரில் திருப்பூா் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து 3 பேரையும் மீட்டனா்.

    இந்த சம்பவம் தொடா்பாக திருப்பூா் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படையும் அமைக்கப்பட்டது.தனிப்படையினர் நெல்லை, மும்பையில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சங்கமேஸ்வரனுக்கும், திருப்பூா் வேலம்பாளையம் சொா்ணபுரி லேஅவுட் பகுதியை சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (34) என்பவருக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கோகுலகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சங்கமேஸ்வரன் வீட்டில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கார் வியாபாரம் செய்து வந்த கோகுலகிருஷ்ணனுக்கும், சங்கமேஸ்வரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் அவர்களுக்குள் பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஒரு மோசடி வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோகுலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேனியை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிறையில் இருந்து வெளியே வந்த கோகுலகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. சங்கமேஸ்வரனிடம் அதிகம் பணம் இருப்பதை அறிந்த கோகுலகிருஷ்ணன் அவர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

    இது பற்றி அவர் வள்ளிநாயகத்திடம் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்திருந்த அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி வள்ளிநாயகம் தனது நண்பர்கள் 3பேரை அழைத்துக்கொண்டு திருப்பூர் வந்துள்ளார். திருப்பூர் வந்த அவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் தங்குவதற்கு இடம் மற்றும் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார்.

    திருப்பூரில் தங்கியிருந்த கொள்ளையர்கள் சங்கமேஸ்வரன் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளனர். யார்-யார் வீட்டிற்கு வருகிறார்கள், வீட்டில் எப்போது ஆட்கள் இல்லாமல் உள்ளனர் என்பதை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கமேஸ்வரன் வீட்டு அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து வீட்டிற்குள் சென்று அவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடித்ததும் கோகுலகிருஷ்ணனுக்கு ரூ.1.50லட்சம் பணத்தை கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறி விட்டு 3 பேரும் தப்பி சென்றுள்ளனர். தலைமறைவான வள்ளிநாயகம் மற்றும் 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்து நகை-பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×