search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மேலும் கால அவகாசம்? : ஜனவரி 15-ந்தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு
    X

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மேலும் கால அவகாசம்? : ஜனவரி 15-ந்தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு

    • தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது.
    • நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மின்வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒவ்வொரு மின் இணைப்புதாரரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல் போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.

    மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.

    வீடு வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் ஒரே வீட்டில் 2 மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்க முதலில் தயக்கம் காட்டி வந்தனர்.

    ஆனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தி இருந்தார்.

    அதன்பிறகு தான் நிறைய பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஆர்வம் காட்டினார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 25 லட்சம் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் 70 லட்சம் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.

    எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தற்போது பொதுமக்கள் ஆர்வமாக ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    இன்னும் 2 நாள் கழித்து எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை ஆய்வு செய்து கணக்கிட உள்ளோம். அதன் பிறகு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கலந்து பேசி கால நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    Next Story
    ×