search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நோயால் பாதிக்கப்பட்டு பணிசெய்ய முடியாத கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவி- தமிழக அரசு நிதி ஒதுக்கியது
    X

    நோயால் பாதிக்கப்பட்டு பணிசெய்ய முடியாத கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவி- தமிழக அரசு நிதி ஒதுக்கியது

    • ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கான நிபந்தனைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    • ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் இந்த நலத்திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற் கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிக் தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அதிக பட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்று நோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்க வாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும், இந்த நிதியுதவியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனை செயல்படுத்தும் வகையில், ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கான நிபந்தனைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன் படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்த கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது பதிவு அட்டையினை இணைத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களிடம் இது தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

    பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குறித்து சிவில் சர்ஜன் தரத்திற்கு மேற்பட்ட அரசு மருத்துவரிடம் இருந்து மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை (அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்) மேற் கொள்ளப்பட்டு வருவது தொடர்பான மருத்துவ ஆவணங்களை மனுவுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    தீவிர நோய் பாதிப்பு குணமடையாமல் நீடிக்கும் நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு 2 மற்றும் 3 ஆண்டிற்கு சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை கேட்பு மனுவுடன் இணைத்து அளிக்க வேண்டும் என்றும், ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் இந்த நலத்திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தீவிர நோய் பாதிப்பு உதவித்தொகையானது மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×