search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: தஞ்சை மாவட்டத்தில் முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
    X

    வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: தஞ்சை மாவட்டத்தில் முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

    • தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரங்களிலும் 20 களப்பணியாளர்களும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கூடுதலாக 20 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 210, கும்பகோணம் மாகராட்சியில் 60 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கொசு ஒழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் காய்ச்சல் கண்டறியக்கூடிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தஞ்சை மானம்புசாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக இந்த மருத்துவமனையை அணுக வேண்டும். உரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். ஒரு பகுதியில் இருந்து அதிக அளவு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வருவதால் உடனடியாக அந்த பகுதி குழு அனுப்பவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது .

    யாருக்கேனும் காய்ச்சல் இருந்தாலோ அந்த பகுதியில் அதிக அளவு காய்ச்சல் பரவுவதாக அறிந்தால் தாமாக முன்வந்து மருந்தகங்களில் சென்று மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதால் மருத்துவர்கள் ஆலோசனைபடியே மருந்து உட்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×