என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் பறவை மோதியதால் 164 பயணிகளுடன் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்
- விமான நிலையத்தில் இருந்த பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது இறந்த நிலையில் ஒரு கழுகு இருந்தது.
- மாதந்தோறும் சராசரியாக 3 அல்லது 4 முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இன்று காலை 7 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 164 பயணிகள் பயணித்தனர்.
விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவை நோக்கி புறப்பட்டது.
விமானம் வானத்தில் பறக்க தொடங்கிய சில நிமிடத்திலேயே விமானத்தின் இடது எஞ்சினில் 2 கழுகுகள் மோதியது.
இதையறிந்த விமானி உடனடியாக விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்து விமானத்தை அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதையடுத்து அங்கிருந்த பொறியாளர்கள் உடனடியாக சென்று ஆய்வு செய்த போது இறந்த நிலையில் ஒரு கழுகு இருந்தது.
அதனை அப்புறப்படுத்திய பொறியாளர்கள் மாற்று எஞ்சினை மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பறவை மோதியவுடன் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது கோவை விமான நிலையத்தில் தான் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
மாதந்தோறும் சராசரியாக 3 அல்லது 4 முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் நடந்து வருகிறது.






