search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செம்பட்டி அருகே பட்டாசு வெடித்து சிதறி கணவன்-மனைவி பலி
    X

    செம்பட்டி அருகே பட்டாசு வெடித்து சிதறி கணவன்-மனைவி பலி

    • விபத்தில் 5 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து சாம்பலாகியது.
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது40). இவர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளராக உள்ளார்.

    இவர் செம்பட்டி-வத்தலக்குண்டு ரோடு புல்வெட்டிக்குளம் பகுதியில் நெல்லூரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். அந்த வணிக வளாகத்தின் மேல்மாடியில் மனைவி நாகராணி (35). மகள்கள் தீப்திகா (7), கனிஷ்கா (5), மகன் மோகன் (4) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இந்த வணிக வளாகத்தில் மேலும் 4 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. நேற்று இந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வீட்டில் கணவன்-மனைவி இருவரும் இருந்த நிலையில் வணிக வளாகத்துக்கு வெளியே அவரது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவெடி சத்தம் கேட்டது. இது சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் கேட்ட பகுதிக்கு ஓடி வந்தனர். அப்போது ஜெயராமன் வீட்டில் இருந்து கரும்புகை வெளி வந்தது.

    மேலும் அந்த வீடும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனையடுத்து செம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். குழந்தைகளிடம் விசாரித்தபோது தனது தாய் தந்தை மற்றும் வேலைக்கார பெண் வீட்டில் இருந்ததாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கருதி அவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி., பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்க்கும் பணி நடைபெற்றது. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நாகராணியை சடலமாக மீட்டனர். இரவு 10 மணி அளவில் ஜெயராமனும் மீட்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். மேலும் வீட்டிற்குள் யாரேனும் உள்ளனரா? என்று சோதனை நடத்தியபோது அங்கு யாரும் இல்லை என தெரிய வந்தது.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அமைச்சர் இ.பெரியசாமி வெடி விபத்து நடந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பலியான தம்பதியின் குழந்தைகள் அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று ஜெயராமன் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே வெடி விபத்து நடந்த இடத்தில் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த இடத்தில் ஜெயராமன் பட்டாசுகள் விற்பனை செய்வதற்காக மட்டுமே அனுமதி வாங்கி இருந்தார். ஆனால் வீட்டில் பட்டாசுகள் தயாரித்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதனால் விபத்து நடந்ததா? என்ற கோணத்திலும், பட்டாசுகள் அளவுக்கு அதிகமாக இருப்பு வைத்திருந்ததால் விபத்து நடந்து சிலிண்டர் ஏதேனும் வெடித்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் 5 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து சாம்பலாகியது. மேலும் ஜெயராமன் வீட்டில் இருந்த பொருட்களும் தீக்கிரையாகின. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வேலைக்கார பெண் வராததாலும் குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாலும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டது.

    இருந்தபோதும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×