search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு அணையில் இன்று நில அதிர்வுகளை கண்டறியும் சீஸ்மோகிராப் கருவி பொருத்தம்
    X

    முல்லைப்பெரியாறு அணையில் இன்று நில அதிர்வுகளை கண்டறியும் 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்தம்

    • ஆக்ஸலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது.
    • கருவிகள் பொருத்தும் பணியில் ஐதராபாத் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து தமிழக-கேரள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூடலூர்:

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டு கூறி வந்தது.

    உச்சநீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதி தன்மை நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதும் கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம், மற்றும் நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு உள்ளது என பொய்யான தகவலை பரப்பி வந்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்காணிக்க சீஸ்மோகிராப் எனப்படும் நில அதிர்வு மானிகள் பொருத்த கேரள கண்காணிப்பு குழுவை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வை குழுவின் கூட்டத்தில் பெரியாறு அணையின் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    கேரள அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்ஸலரோகிராப் கருவிகள் வாங்குவதற்கு ரூ.99.95 லட்சம் நிதி தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தைச் சேர்ந்த மத்திய அரசின் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விஜயராகவன், சேகர் ஆகியோர் இன்று முல்லைப்பெரியாறு அணையில் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்ஸலரோகிராப் கருவிகள் பொருத்துவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்தனர். முன்னதாக கருவிகள் பொருத்துவதற்கு தேவைப்படும் பொருட்கள் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளான ஷாம் இர்வின், குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் மேற்பார்வையில் கொண்டு செல்லப்பட்டது. என்.ஜி.ஆர்.ஐ. விஞ்ஞானி சேகர் உடன் சென்றார்.

    இன்று சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப்பகுதியில் 3 இடங்களில் நில அதிர்வு மானி பொருத்தப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆக்ஸலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது. இரு மாநிலத்துக்கான பிரச்சினை என்பதால் இங்கு அமைக்கப்படும் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் நில நடுக்க ஆய்வுக்குழுவுக்கு தகவல் செல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்கப்படுகிறது என்றனர்.

    கருவிகள் பொருத்தும் பணியில் ஐதராபாத் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து தமிழக-கேரள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×