என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிராமங்களுக்குள் புகுந்த கடல்நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது
- மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.
- சிர்காழி, கொள்ளிடத்தில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.
சீர்காழி:
'மாண்டஸ்' புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
பழையார், மடவாமேடு, ஓலக்கொட்டாயமேடு, கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவர்க்கரை, பூம்புகார், வானகிரி, சாவடி குப்பம், நாயக்கர் குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
கடல் அலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் எழுந்தது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தடுப்புச்சுவரை ராட்சத அலைகள் எழுந்து கிராமங்களுக்கு தண்ணீர் புகுந்தது.
தொடுவாய், மடவாமேடு ஆகிய கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களுடைய விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் கொள்ளிடம் அருகே மடவாமேடு கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தது. இதன் காரணமாக மடவாமேடு கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றனர்.
அவர்கள் கடற்கரையில் நின்று பார்வையிட்டபோது ராட்சத அலையில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள் புதுப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
புயலின் காரணமாக மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
புயல் காரணமாக சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்னதாக நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் மழையால் சாய்ந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






