search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேவகோட்டையில் ரூ.50 லட்சம் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்-  5 பேர் கைது
    X

    தேவகோட்டையில் ரூ.50 லட்சம் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்- 5 பேர் கைது

    • கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவகோட்டை நகரில் காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்களை கைது செய்து வருகிறார். இவர்களுக்கு மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளை சில நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    தேவகோட்டை நகரில் பெட்டிக்கடையில் சில்லறை விற்பனை செய்து வந்த ரகுநாதபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த ராமு மகன் முருகன் (36), கல்லூரி நகர் இடையன்வயல் பகுதியை சேர்ந்த நெல்லியப்பன் மகன் செந்தில் (47) இருவரையும் பிடித்து இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்தவர்கள் பற்றிய விபரம் தெரிய வந்தது.

    இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பரகத்தெருவை சேர்ந்த அன்வர் மகன் செய்யது இம்ரான் கான் (29), பெத்த தேவன்கோட்டை கருப்பையா மகன் வாசு (50), மேட்டு கற்களத்தூர் பாலுசாமி மகன் கார்த்தியராசு ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    மேலும் இவர்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களையும், ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    Next Story
    ×