search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையம் தங்கம் கடத்தல் மையமாக திகழ்கிறதா?- சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரம்
    X

    சென்னை விமான நிலையம் தங்கம் கடத்தல் மையமாக திகழ்கிறதா?- சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரம்

    • சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் சென்னைக்கு தங்கம் கடத்தலை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.
    • வெளிநாடுகளில் இருந்து அரிய வகை குரங்குகள், பாம்பு குட்டிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பறவைகள், பூச்சிகள் கடத்தலும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் இருந்து தினசரி துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பாங்காக் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 25 முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது விமான சேவை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் வழக்கமான எண்ணிக்கைக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்ப்படை பாதுகாப்பு வீரர்கள், விமானநிலைய ஊழியர்களின் கண்காணிப்பை மீறி தங்கம் கடத்தல் நீடித்து வருகிறது. இதில், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சென்னைக்கு சுமார் ரூ. 12 கோடி மதிப்பிலான தங்கங்கள் கடத்தி வரப்பட்டு உள்ளன. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்துள்ளனர்.

    தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க சினிமா பாணியில் விதவிதமாக யோசித்தாலும் அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்து கைது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    ஷு, பெல்ட், சூட்கேஸ், தலைமுடி, உள்ளாடை மற்றும் உடல் உறுப்புக்களில் மறைத்து வைத்து தங்கத்தை கட்டியாகவும், கம்பிகளாகவும், உருக்கியும் புதுப்புது மாடல்களில் கடத்தி வரும் சம்பவம் நீடித்து வருகிறது.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் சென்னைக்கு தங்கம் கடத்தலை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

    இது போல் வெளிநாடுகளில் இருந்து அரிய வகை குரங்குகள், பாம்பு குட்டிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பறவைகள், பூச்சிகள் கடத்தலும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

    இவை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற முழு விவரம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதேபோல் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்த பாய்ச்சலில் ரங்கூன் விலங்கு மற்றும் அரியவகை பல்லி ஒன்றும் கடத்திவரப்பட்டது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 12 கோடி ஆகும். இதேபோல் போதை பவுடர், வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் தொடர்ந்து சிக்கி வருவது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 25-ந்தேதி மட்டும் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 2.6 கிலோ தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ. 1.3 கோடி ஆகும்.

    இந்த கடத்தல் தங்கத்தை கடத்தல்காரர்கள் இடம் இருந்து வாங்கி விமான நிலைய அதிகாரி ஒருவர் வெளியே கொண்டு வந்த போது பிடிபட்டார். இது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதேபோல் கடந்த 12-ந்தேதி ரூ.3 கோடி மதிப்பிலான போதை பவுடர், 14-ந் தேதி ரூ. 98 லட்சம் மதிப்பிலான தங்கம், 15-ந் தேதி ரூ.8லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் ரூ.1 1/2 கோடி மதிப்பிலான தங்கம்,19-ந் தேதி ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம், 18-ந் தேதி ரூ.1.12கோடி மதிப்பிலான தங்கம், 22-ந்தேதி ரூ.69 லட்சம் மதிப்பிலான தங்கம், 23-ந் தேதி ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், 26-ந் தேதி ரூ.1.58 கோடி மதிப்பிலான தங்கத்தை கட்டியாகவும், உருக்கப்பட்ட நிலையிலும் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் அடுத்தடுத்து பிடிபட்டு உள்ளது.

    இந்த தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினாலும் அவர்களின் பின்னணி மற்றும் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. தங்கம் கடத்தலில் பிடிபடும் நபர்கள் தொடர்ந்து இதே போல் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கமிஷன் அடிப்படையில் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதற்காக சென்னையில் பெரிய அளவில் தங்கம் கடத்தல் கும்பல் நெட்வொர்க் அமைத்து செயல்படுவது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களை அதிகாரிகளால் கூண்டோடு பிடிக்க முடியவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேரடியாக வரும் பயணிகளை சுங்கத்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பாளர்கள் என்பதால் அவர்கள் இலங்கை, சிங்கப்பூர் மலேசியா வழியாக சென்னைக்கு வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் தற்போது இலங்கை வழியாக வரும் விமானங்களில் கடத்தல் தங்கம் பிடிபடுவது அதிகரித்து உள்ளது. இதனால் தங்கம் கடத்தலில் சென்னை முக்கிய மையமாக மாறி வருகிறது. இதில் ஈடுபடுபவர்களை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகளும் விமானநிலைய அதிகாரிகளும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் குருவிகளாக மட்டும் இருப்பதால் அவர்களுக்கு மூளையாக செயல்படும் நபர்கள் சிக்குவதில்லை. எனவே தங்கம் கடத்தலில் இருக்கும் முக்கிய புள்ளிகளை பிடித்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் நேர்மையாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறால் சில குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வனவிலங்கு கடத்தி வருவது, வெளிநாட்டு பணங்கள் எடுத்துச் செல்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதை மீறி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    ஏற்கனவே தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வரும் அதே நபர்கள் மீண்டும், மீண்டும் கடத்தி வருவது வாடிக்கையாக இருக்கிறது. புதுப்புது ஆட்களை கடத்தில் ஈடுபட செய்வதும் நடந்து வருகிறது. விமான நிலையத்தில் என்னதான் சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களை பிடித்து தங்கத்தை பறிமுதல் செய்தாலும் முடிவில் அவர்களை காவல்துறையினரிடம் தான் ஒப்படைப்பார்கள். அவர்கள்தான் அவர்களின் குற்றத்திற்கு ஏற்ப வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் போலீசார் அவர்கள் மீது சுங்கத்துறை கடத்தல் பிரிவில் வழக்கு மட்டும் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீதும், புதிதாக கடத்தல் மீதும் இரண்டு, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தால் தான் மீண்டும் அவர்கள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட தயங்குவார்கள், பயப்படுவார்கள் .ஆனால் போலீசாரோ சாதாரண வழக்கு பதிவு செய்வதால் அவர்கள் எளிதாக வெளியே வந்து மீண்டும் கடத்தலில் ஈடுபடுகின்றனர். கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் பஸ் நிலையம், முக்கிய ரெயில் நிலையம், போலீஸ் நிலையங்களில் ஒட்டப்படுவதை போல் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளியின் புகைப்படங்கள் வெளிப்படையாக சென்னை விமான நிலையத்தின் பகுதிகளில் ஒட்ட வேண்டும். இதனால் பொதுமக்கள் கடத்தல் ஆசாமிகளை எளிதாக அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தரலாம். மேலும் விமான நிலையத்தில் பல்வேறு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியும். அப்படி செய்தால் ஓரளவு கடத்தலை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×