search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைத்த வருவாய் அதிகாரிகள்- இந்து முன்னணியினர் வாக்குவாதம் 
    X

    விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு 'சீல்' வைத்த வருவாய் அதிகாரிகள்- இந்து முன்னணியினர் வாக்குவாதம் 

    • விநாயகர் சிலை தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக்கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்காக பாளையங்கோட்டை அடுத்த கிருபா நகர் பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக பல்வேறு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விநாயகர் சிலை கூடத்திற்கு வருவாய் துறை, காவல் துறையினர் சீல் வைக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் குவியத் தொடங்கினர்.

    அதே வேளையில் போலீசாரும் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஏற்கனவே விநாயகர் சிலைகளை பெறுவதற்கு இந்து அமைப்பு நிர்வாகிகள், அதனை தயாரிக்கும் தொழிலாளர்களிடம் பல்லாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ள நிலையில், தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர்.

    10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் முன்தொகை கொடுத்தவர்கள் ஆட்டோ மற்றும் டெம்போ வேன்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணிகளை தொடங்கினர்.

    இந்த நிலையில் பாளையங்கோட்டை வருவாய் தாசில்தார் தலைமையில் வருகை தந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஏற்கனவே விநாயகர் சிலை தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆய்வு முடிவுகள் வெளியே வரும் வரை சிலைகளை எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என கூறி தயாரிப்பு கூடத்தை சுற்றி பேரிகாடுகள் அமைத்து சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகளையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் தயாரிப்பு கூடத்தில் கொண்டு சேர்த்தனர். இதனால் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இன்று வரும் மாதிரி முடிவுகளை பொறுத்து சிலைகள் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியும் நிலை உருவாகியுள்ளது. போலீசார் பேரிகாடுகள் வைத்து தயாரிப்பு கூடத்தை சீல் வைத்த நிலையில் அங்கு 2-வது நாளாக இன்றும் கூடுதல் கண்காணிப்பு பணிக்காக போலீசரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×