search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரட்டூரில் கழிவுநீர் சேகரிப்பு நிலையத்தால் தவிக்கும் குடியிருப்பு வாசிகள்- துர்நாற்றம் தொடர்ந்து வீசுவதால் அவதி
    X

    கோப்பு படம்

    கொரட்டூரில் கழிவுநீர் சேகரிப்பு நிலையத்தால் தவிக்கும் குடியிருப்பு வாசிகள்- துர்நாற்றம் தொடர்ந்து வீசுவதால் அவதி

    • கொடுங்கையூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
    • தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பம்பிங் நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறது.

    சென்னை:

    சென்னை கொரட்டூரில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் சார்பில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைத்து பராமரிக்கப்படுகிறது. 22 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய இந்த சேகரிப்பு நிலையத்துக்கு நகரில் கழிவு நீரகற்று வாரியத்தால் சேகரிப்படும் கழிவுநீர் கொண்டுவரப்பட்டு சேகரிக்கப்படுகிறது.

    இங்கிருந்து கொடுங்கையூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அருகே 222 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கடந்த 2019-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கழிவுநீர் சேகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மற்றும் வாயு கசிவுகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக பொது மக்கள் சார்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டதும் அவ்வப்போது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் துர்நாற்றம் வெளிவருவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

    குடியிருப்பு வாசிகள் கூறும்போது, நாங்கள் இந்த பகுதியில் வீடு வாங்கி குடியேறியபோது வேறு எந்த பிரச்சினையும் இல்லை. துர்நாற்றம் வெளி வருவது, வாயு கசிவு ஏற்படுவது பற்றி புகார் செய்ததும், வீட்டு வசதி வாரியம் தற்காலிகமாக குடியிருப்பை சுற்றி தடுப்பு நடவடிக்கையாக சில கட்டமைப்புகளை ஏற்படுத்தியது. அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்றனர்.

    அந்த பகுதியின் கவுன்சிலர் ஜான் கூறும்போது, இந்த பிரச்சினை பற்றி பலமுறை மாநகராட்சி கூட்டத்திலும் கேள்வி எழுப்பி இருக்கிறேன். பம்பிங் நிலையத்தை இங்கிருந்து மாற்ற முடியாது. துர்நாற்றம் வெளியேறுவதை தடுக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பம்பிங் நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் சில ஆய்வுகள் நடத்தி வருவதாகவும் விரைவில் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×